(லங்கா தமிழ் நியூஸ்.டிசம்பர்.24.2009. இரவு.09.25) மலையக சுகாதாரத்துறை வரலாற்றில் முதற் தடவையாகப் பெருந்தோட்டப் பெண்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாந்திகதி முதல் குடும்பநல உத்தியோகத்தர்களாகப் பணியாற்றுகின்றனர்
(லங்கா தமிழ் நியூஸ்.டிசம்பர்.24.2009. இரவு.09.25) மலையக சுகாதாரத்துறை வரலாற்றில் முதற் தடவையாகப் பெருந்தோட்டப் பெண்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாந்திகதி முதல் குடும்பநல உத்தியோகத்தர்களாகப் பணியாற்றுவர்.
ஒரு வருடகாலப் பயிற்சியின் பின்னர் பரீசைக்குத் தோற்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட 44 பெண்களே ஜனவரி முதலாந்திகதி முதல் பெருந்தோட்ட வைத்தியசாலைகளில் பணியாற்றுவர்..
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைகளுக்கமைய 35 மலையகப் பெருந்தோட்ட வைத்தியசாலைகள் அரசாங்கத்தின் பொறுப்பின்கீழ் கொண்டுவரப்பட்டன. இதனையடுத்து இந்த வைத்தியசாலைகளில் கடமையாற்றவென குடும்பநல உத்தியோகத்தர்கள், தாதியர்கள், மருந்தாளர்கள் போன்ற பணிகளுக்கும் பெருந்தோட்டங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
இதற்கென விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இதில் 44 பெண்கள் குடும்பநல உத்தியோகத்தர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு பதுளையில் உள்ள தாதியர் பயிற்சிக் கல்லூரியில் 08 மாத பயிற்சி அளிக்கப்பட்டு மேலும் நான்கு மாதங்கள் மட்டக்களப்பு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் மேலதிகப் பயிற்சி வழங்கப்பட்டது.
பயிற்சியினை முடித்துக்கொண்ட 44 பேருக்குக் கடந்த 16 ஆந் திகதி மட்டக்களப்பில் வைத்து நியமனங்கள் வழங்கப்பட்டன. இவர்கள் ஜனவரி முதலாந்திகதி தமக்கு நியமனம் வழங்கப்பட்ட வைத்தியசாலைகளுக்குச்; சென்று கடமைகளைப் பொறுப்பேற்கின்றனர். அதற்கு முன்னதாக சுகாதாரத்துறை பிரதியமைச்சர் வடிவேல் சுரேஷ், புதிய குடும்பநல உத்தியோகத்தர்களுக்கான வரவேற்பு நிகழ்வொன்றை எதிர்வரும் 27 ஆந் திகதி பதுளையில் ஏற்பாடு செய்துள்ளதாக பிரதியமைச்சரின் செயலாளர் கே.பிரியகிருஷாந்தினி தெரிவித்தார். மட்டக்களப்புக்கு அந்தப் பெண்கள் பயிற்சிக்காகச் சென்றபோதும், பிரதியமைச்சர் தலைமையில் பூஜைவழிபாட்டு நிகழ்வு நடத்தப்பட்டு வழியனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, 40 பொது சுகாதாரப் பரிசோதகர்களுக்கும், 10 மருந்தாளர்களுக்கும் விரைவில் நியமனம் வழங்கப்படவுள்ளதால் பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தெரிவித்தார். இவர்களுக்குத் தற்போது பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இது இவ்வாறிருக்க மற்றொரு தொகுதி குடும்பநல உத்தியோகத்தர்களுக்கான பயிற்சியும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த நவம்பர் மாதம் 15 ஆம் திகதியுடன் ஏற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.